அதுவரை பேனாவை பிடித்த கைகள்... | கதை + கவிதை | சபரி வள்ளி சங்கர்

 


மல்லிகை மொட்டு …

முள் மேடுகளை கிழித்துக் கொண்டு

வலியால் பூத்த மல்லிகை மொட்டு

இப்படிப்பட்ட காட்சியை கண்டு புளங்காகிதம்

அடைவதற்கு எவரும் இல்லை

இல்லை என்றால் அவர்களின் கடிகாரத்தில் அது சிக்கவில்லை என்றும் வேண்டுமென்றே தவிர்க்கிறார்கள் என்றும் அர்த்தம்.

காற்றின் உதவியோடு மொட்டு அதன் மணத்தை பரப்பியது

நுகர வேண்டிய மூக்குகள் கடிவாளம் போட்டிருந்தது

அதை அறிந்தும் அறியாத மாரி அந்த மல்லிகை மொட்டு இன்று வரை -


"அப்..பா" என்று மெல்ல அவள் கூப்பிட்டாள்

அவனோ எழுதுவதில் முழுகி போனவன் போல திரும்பிப் பார்க்காமல் "ம்ம்ம்" என்று பதிலளித்தான்.

பயத்துடன் "இந்தாங்க பா இதுல ஒரு கையெழுத்துப் போட்டு குடுங்க" என்று அவள் ஒரு பேப்பரை நீட்டினாள்.

அவன் எழுதுவதை நிற்பாட்டி விட்டு ஓரக்கண்ணில் அவளைப் பார்த்தான் அவள் மிகப் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தாள் அந்தப் பேப்பரை ஏந்திய கை எங்கே அப்பா திட்டி விடுவாரோ என்ற பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது.

அவளிடமிருந்து அந்த பேப்பரை வாங்கிப் படித்தான் "permission letter" என்ற தலைப்பில் அது எழுதப்பட்டிருந்தது.

ஒரு கனீர் குரலில் "எதுக்கு permission?" என்று கேட்டான்.

அவள் போட்டு இருந்த வெள்ளைக் கலர் தாவணியை கசக்கிக் கொண்டே வளவளவென்று பேசும் உதடுகள் கூட அன்று திக்க தொடங்கியது;திக்கியப் படி சொன்னாள் "அஅ அப்…பா.. அது ஸ்….கூல் பீஸ் கட்டளை..ளா பா அதுக்காக இன்..னும் ஒரு வாரம் பெர்மிஸ்ஸின் கேட்டு கீதா மிஸ் எனக்கு எழுதிக் குடுத்தாங்க பா… மிஸ் உங்க கையெழுத்த வாங்கிட்டு வர சொன்னாங்க பா"

அதைக் கேட்டவுடன் அவன் கண்கள் கலந்தன

"அவளுக்கு தெரியக் கூடாது என்று

நான் எவ்வளவு தான் என் ஏழையை ட்ரங்க் பெட்டிக்குள் வைத்து பூட்டினாலும்

சூழ்நிலை தினமும் அந்த ட்ரங்க் பெட்டியைத் திறந்து என் மகளுக்கு கண்காட்சி காட்டுகிறதே!"

என்று எண்ணி அழ ஆரம்பித்தான்.

அவன் மகள் நின்று கொண்டு இருப்பதை உணர்ந்தவன் கண்களை வேகமாக துடைத்துவிட்டு "father's sign" என்று எழுதி இருந்த இடத்தில் அவனின் கையெழுத்தையும்

"கீதா மிஸ் என்னை செருப்பால கூட அடிங்க நான் அன்பாக வாங்கிக்கிறேன் ஆனா இப்படி ஒரு லெட்டர் ஓட என் மகளை வீட்டுக்கு அனுப்பாதீங்க" என்று கூறுவது போல இரண்டு சொட்டுக் கண்ணீரை வைத்து லெட்டரை மடித்து பின்னால் நின்று கொண்டிருந்த அவளிடம் கொடுத்தான்.

தலையை குனிந்தபடி எதுவும் பேசாமல் அதை வாங்கிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்

அவனுக்கு என்ன தோன்றியது என்று தெரியவில்லை திடீரென்று எழுந்து ஆனியில் அவன் மாட்டியிருந்த அரக்கை சட்டையை போட்டுக் கொண்டு வெளியில் வந்து பார்த்தான்

அவன் மகளுக்கு பிடித்தமான கார்ட்டூன் டிவியில் ஓடிக் கொண்டிருந்தது எப்போதுமே அதை ரசித்தபடி பார்க்கும் அவள் கண்கள் அன்று பிணத்தின் விழிகள் போல் உணர்ச்சியற்று பார்த்துக்கொண்டிருந்தது.

அந்தக் கண்களைப் பார்த்த பிறகுதான் அவன் அந்த விஷயத்தை நிச்சயமாக செய்தாக வேண்டும் என்று முடிவு எடுத்தான்.

 வெளியில் வந்து பக்கத்து வீட்டுக்காரர்களிடம் அவளை பார்த்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டு கணேஷ் பப்ளிகேஷன் ஆபீஸ்க்கு புறப்பட்டான்.

அந்த பப்ளிகேஷன் தான் அவனுக்கு பணம் தராமல் அலைக்கழித்துக் கொண்டே இருக்கிறது

அந்த ஆபீஸ்யின் வாசலில் வெகு நேரம் கால் கடுக்க ஒரு கடன் பெற்றவன் போல நின்று கொண்டிருந்த அவனுக்கு அவன் காணவந்த ஆபீஸர்யின் கார் சத்தம் நிம்மதியை அளித்தது. அந்த காரிலிருந்து ஆபீஸர் கடிவாளமிட்ட மூக்குடன் வெளியே வந்தார்.

அவரை கண்ட உடனே இவன் அவரை நோக்கி தடதடவென்று ஓடி கண்ணீர் மல்க மண்டியிட்டு பேனாவை மட்டும் வைராக்கியமாக பிடித்த கைகள் இப்பொழுது அந்த ஆபீஸர்யின் காலை இருக்கப் பற்றிக் கொண்டு கெஞ்சுகிறது

"அய்யா என் புள்ளைக்கு ஸ்கூல் பீஸ் கட்டனும் யா

 தயவு செஞ்சு என் காசு கொடுத்துடுங்க யா" என்று கதறினான்.

அந்த ஆபீஸர் எதுவும் சொல்லாமல் அவர் மூக்கில் இருந்த கடிவாளத்தை காலுக்கு நகர்த்தி அவன் கைகளை உதறிவிட்டு ஆபீஸ்குள் நுழைந்தார்.

அவர் போவதை இவனால் பார்க்க மட்டும்தான் முடிந்தது. அங்கேயே அமர்ந்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான்.

வெள்ளைக் கலர் தாவணி அவன் பின்னால் நின்று கொண்டிருந்ததை உணராமல்...


Comments

Post a Comment